பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் குரல்!. ”FIR பதிவு செய்த உடனேயே இடைநீக்கம் செய்தது ஏன்?” – எக்ஸ் தளத்தில் காரசார பதிவு.
காதல் உறவு முறிந்த விவகாரத்தில், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்ட உடனேயே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பல சந்தேகங்களை எழுப்புவதாக முன்னாள் சிபிஐ இயக்குனரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
”காதல் முறிவு குற்றவியல் வழக்கு அல்ல!”
இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாகேஸ்வர ராவ், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, “இரண்டு பேருக்கு இடையிலான பரஸ்பர காதல் உறவு முறிந்தால், அதை ஒரு குற்றவியல் வழக்காக மாற்றக் கூடாது. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இருவரின் சம்மதத்துடன் ஒரு உறவு இருந்திருக்கும் பட்சத்தில், தவறு இருப்பின் இருவர் மீதும் சமமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்காது.”
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள்
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட உடனேயே உதய் கிருஷ்ண ரெட்டியை இடைநீக்கம் செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த இடைநீக்க உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணை முழுமையாக முடிவடையும் வரை, உதய் கிருஷ்ண ரெட்டி தனது ஐபிஎஸ் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகளுக்குக் கோரிக்கை
இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்,அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஆந்திர மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் தெலங்கானா டிஜிபி மற்றும் ஐதராபாத் காவல் ஆணையர் ஆகியோர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்த பயணம்
வழக்கமான சாதாரணக் காவலர் (Police Constable) நிலையிலிருந்து தனது கடுமையான உழைப்பால் உயர்ந்து, அகில இந்திய அளவில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரி நிலையை அடைந்துள்ள உதய் கிருஷ்ண ரெட்டியின் வாழ்க்கைப் பயணம், நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாகத் திகழ்கிறது என்றும் நாகேஸ்வர ராவ் தனது பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
“ரூ. 5 லட்சம் கடன் வாங்கியும் ஏமாற்றம்”: டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பாஜக தொண்டர் போர்க்கொடி!
