தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள், அருணாச்சலத்தின் மரணத்திற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெஞ்சம் கலங்குகிறது!
தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகத் தனது கடுமையான கண்டனத்தை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், இச்சம்பவத்திற்கு முதலமைச்சரின் மௌனமே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தூத்துக்குடியில் காவல்துறையினர் தாக்கியதில் விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழந்துவிட்ட செய்தி அறிந்து நெஞ்சம் கலங்குகிறது. காவல்துறையினர் தனக்கு இழைத்த கொடூர அநீதியை, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலமே நேரில் வாக்குமூலமாக எடுத்துச் சொன்னதைக் கேட்கும்போது மனதுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. தன் மகனை இழந்து கண்ணீரில் தவிக்கும் பெற்றோருக்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” என உதயநிதி ஸ்டாலின், மாநில எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளாா்.
முதலமைச்சரின் மௌனத்திற்கு எதிர்ப்பு
மாநிலத்தில் தொடரும் இத்தகைய அசம்பாவிதங்களுக்குக் காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய அவர், “காவல்துறைக்கு நேரடியாகப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் இதுபோன்ற தொடர் அநீதிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதுதான், இதுபோன்ற சட்டவிரோதச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணமாக அமைகிறது.
ஒருபுறம் திரைப்படங்களைப் பார்த்து விட்டு உருகி கண்ணீர் வடிக்கும் இந்த ஆட்சியாளர்கள், அதிகாரத்தின் சித்திரவதையால் ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோயிருக்கும் இந்தச் சூழலில் அருணாச்சலத்தின் மரணத்திற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?” என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.
பரப்பரப்பில் தமிழக அரசியல்
ஏற்கனவே தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உயிரிழந்த அருணாச்சலத்தின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராடி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இந்த ஆவேச அறிக்கை, மாநில அரசியல் களத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
