டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்த சிறப்புப் பார்வை
“பொய் பேசுவதற்குத்தான் பயப்பட வேண்டும், உண்மையை பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?” என்ற முழக்கத்துடன், திரையுலகைத் தாண்டி மக்கள் பிரச்சனைகளுக்காகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தற்போது டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

திரையுலகப் பயணம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த பிரகாஷ்ராஜின் இயற்பெயர் பிரகாஷ்ராய் ஆகும். நாடக மேடைகள் மற்றும் சின்னத்திரை மூலமாகத் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய அவரை வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவர் புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலசந்தர் ஆவார். 1994 ஆம் ஆண்டு வெளியான ‘டூயட்’ படத்தின் மூலமாகத் தமிழுக்கு வந்த இவரின் பெயரை ‘பிரகாஷ் ராஜ்’ என்று மாற்றியவர் பாலசந்தர்தான்.
தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் கம்பீரமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த அவர், ‘கில்லி’, ‘போக்கிரி’, ‘சிங்கம்’ போன்ற படங்களில் மிரட்டலான வில்லனாகவும், ‘அபியும் நானும்’, ‘மொழி’ போன்ற படங்களில் நெகிழ்ச்சியான குணச்சித்திர நடிகராகவும் நடித்து தேசிய விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
அரசியல் பிரவேசத்திற்குத் திருப்புமுனை
சினிமாவைத் தாண்டி பிரகாஷ்ராஜ் தீவிர அரசியல் மற்றும் சமூகப் கருத்துக்களைப் பேசத் தொடங்கியதற்கு முக்கியக் காரணம் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலை சம்பவமாகும். கௌரி லங்கேஷின் நெருங்கிய நண்பரான அவரது மறைவு பிரகாஷ்ராஜை உலுக்கியது. “கொலைகாரர்களைக் காப்பாற்ற முயன்றாலும் உண்மை ஒரு நாள் வெளிவரும்” என்று முழங்கிய அவர், சமூக வலைதளங்களில் ‘Just Asking’ (கேள்வி கேட்கிறேன்) என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய அரைக் கேள்விகளாக எழுப்பத் தொடங்கினார்.
குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜக அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலும் விஜய்க்கு எதிரான கேள்விகளும்
தமிழகத்தில் திமுக அரசின் மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் மொழிவாரி கொள்கைகளை ஆதரித்து வந்த பிரகாஷ்ராஜ், சமகால அரசியல் குறித்துத் தன் கருத்துக்களைத் துணிச்சலாகப் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் அரசியலில் களம் கண்ட நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அவரை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பினார். ”சினிமாவில் ஒரே படத்தில் டாக்டராகவும், இன்ஜினியராகவும், முதலமைச்சராகவும் ஆகிவிட முடியும்; ஆனால் அரசியலில் அது சாத்தியமா? ரசிகர்களின் அன்பை வைத்துக்கொண்டு நாட்டை ஒப்படைக்க முடியாது” எனத் துணிச்சலாக விஜய்யை விமர்சித்துத் தமிழ்நாட்டில் பேசுபொருளானார்.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நேரடி பங்கேற்பது ஏன்?
தற்போது டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்தில் பிரகாஷ்ராஜ் நேரில் கலந்துகொண்டுள்ளார். ”தொலைவில் இருந்து கொண்டு பேசுவதை விட, களத்திற்கு நேரில் சென்று நிலவரத்தைப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்த அவர், போராடும் இளைஞர்களைத் தேசவிரோதிகள் போலச் சித்தரிக்கும் அரசாங்கத்தின் போக்கைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பற்ற, ஒட்டுமொத்த நாட்டின் குடிமக்களின் உரிமைப் போராட்டமாக இது பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக மிரட்டிய பிரகாஷ்ராஜ், இன்றைக்கு மக்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் உண்மையான ‘ஹீரோவாக’ களத்தில் நிற்பதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
