“போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் பாஜக உண்மையான தேசியவாதக் கட்சி அல்ல” – இரு கட்சிகளையும் விளாசிய கீதாஞ்சலி!
“பிரதமரின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சி நடத்திய திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை” என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி மிகக் காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளையில், “போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்து ஒடுக்க நினைக்கும் பாஜக, ஒருபோதும் உண்மையான தேசியவாதக் கட்சி அல்ல” என்றும் அவர் இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
“மக்களை இனி ஏமாற்ற முடியாது!”
பிரதமரின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள கீதாஞ்சலி, காங்கிரஸின் இந்த அரசியல் நகர்வில் எவ்வித உண்மையும் இல்லை என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “பிரதமர் இல்லத்தின் முன் திடீர் போராட்டம் நடத்திய காங்கிரஸின் நடவடிக்கையில் துளியும் நேர்மை இல்லை. அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களுடன் இணைந்து ஜந்தர் மந்தரில் போராடியிருக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களை இனி ஏமாற்ற முடியாது. நேர்மையற்ற முறையில் அரசியல் செய்பவர்களை நாட்டின் இளைஞர்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள்.” என கீதாஞ்சலி, சோனம் வாங்சுக்கின் மனைவி கடுமையா தெரிவித்துள்ளாா். 

பாஜக அரசுக்கும் கடும் கண்டனம்
அதேநேரத்தில், உரிமைகளுக்காகப் போராடி வரும் மாணவர்களை நடத்தும் விதம் குறித்து மத்திய பாஜக அரசுக்கும் அவர் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தங்கள் உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்து, அவர்களின் குரலை ஒடுக்கப் பார்க்கும் பாஜக, நிச்சயமாக ஒரு உண்மையான இந்து கட்சியோ அல்லது தேசியவாதக் கட்சியோ அல்ல” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டங்களை அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதைக் கண்டித்தும், அரசுகள் அதை அடக்க நினைப்பதைக் கண்டித்தும் கீதாஞ்சலி வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை தலைநகர் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை உலுக்கிய ஒரு புகைப்படம்: கைது வாகனத்தின் முன் ஒற்றைப் பெண்ணாக நின்று சாதித்த இளம்பெண்!
