- Advertisement -
குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற விழாவில், ரூ.20,700 கோடிக்கும் அதிக மதிப்பிலான 326 கி.மீ பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ரூ.9,700 கோடி மதிப்பிலான 3 ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

வேகமெடுக்கும் பிரத்யேக சரக்கு வழித்தடம்:
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “2006-ல் உருவாக்கப்பட்ட சரக்கு போக்குவரத்துக்கான சிறப்புத் திட்டம் 2014 வரை கோப்புகளிலேயே முடங்கிக் கிடந்தது. 2014-க்குப் பின் பணிகளை விரைவுபடுத்தியதால், தற்போது 2,800 கிலோ மீட்டருக்கும் அதிகமான சரக்கு வழித்தடப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடங்களில் தினமும் 430க்கும் அதிகமான சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் சரக்கு ரயில்களின் பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளது” என்று கூறினார்.
ரயில்வே பட்ஜெட் மற்றும் நவீனமயமாக்கல்:
- பட்ஜெட் உயர்வு: இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ரூ.2.9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு அதிகம்.
- ரயில் பெட்டிகள் உற்பத்தி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 50,000-க்கும் அதிகமான நவீன ரயில் பெட்டிகளைத் தயாரித்து முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
முந்தைய அரசு மீது விமர்சனம்:
“2014 முதல் இதுவரை இந்தியா 50,000 நவீன ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ள நிலையில், முந்தைய அரசால் 10 ஆண்டுகளில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை. முந்தைய ஆட்சியாளர்கள் பொய்களை மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்தனர்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ எனும் இலக்கை அடைய இளைஞர்கள் உண்மையின் முழக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
