கீழடி அகழாய்வில் தமிழர்களின் பழங்காலப் பெருமைமிக்க நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், மீன் உருவம் கோட்டுச் சித்திரமாகப் பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை ஒன்று புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2,600 ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்த நகர நாகரிகத்திற்கு மேலும் ஒரு வலுவான சான்று – முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போதுதான் பழங்காலத் தமிழர்களின் ஒப்பற்ற கலை மற்றும் குறியீட்டுத் திறனைப் பிரதிபலிக்கும் இந்த அரிய தொல்பொருள் வெளிவந்துள்ளது.
பண்பாட்டின் உயிருள்ள சான்று
இதுகுறித்து முன்னாள் நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கீழடி என்பது தமிழர்களின் பெருமை மட்டுமல்ல; உலக நாகரிக வரலாற்றில் தமிழின் அழியாத தடம். தமிழ்நாடு தொல்லியல் துறையின் மூலம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் கோட்டுச் சித்திரமாகப் பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது, 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலை, குறியீடுகள், கைவினைத்திறன் மற்றும் நகர நாகரிகத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்ததை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இங்கு வெளிப்படும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் நமது வரலாறு வெறும் கதையல்ல; அது அறிவும் பண்பாடும் செழித்த ஒரு நாகரிகத்தின் உயிருள்ள சான்று என்பதைத் தொடர்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கீழடி அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் இதுபோன்ற அரிய தொல்பொருட்கள், வைகை நதி நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிலைநிறுத்தியுள்ளன.
தென்பெண்ணை ஆறு நீர் பங்கீடு: தனித் தீர்ப்பாயம் அமைக்கத் தமிழ்நாடு அரசு தீவிர வலியுறுத்தல்!
