தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வைகோவின் நேரில் ஆஜர் & காரசார வாதம்
இந்த விசாரணையின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தனது வாதங்களை முன்வைத்தார். ”விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீமை கருவேல மரங்களை நாங்கள் அகற்றியுள்ளோம். இந்த மரங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயு காரணமாக எனது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.”
மேலும், “சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் கருவேல மரங்களை அகற்ற முன்வரும்போது, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து அவர்களின் ஆர்வத்தைக் குறைக்கின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்ட பிறகே அனுமதி கிடைக்கும் சூழல் நிலவுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற எவ்வித முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்றும் வைகோ வலியுறுத்தினார்.
அரசுத் தரப்பு விளக்கம்
இதற்குப் பதிலளித்துப் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் சுமார் 90 சதவீதம் வரை அகற்றப்பட்டுவிட்டதாகவும், வட மாவட்டங்களில் இந்தப் பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதிபதிகளின் அதிருப்தியும் அதிரடி உத்தரவும்
அரசுத் தரப்பு விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளுடன் அரசுத் துறைச் செயலாளர்கள் எந்தவொரு ஆலோசனைக் கூட்டத்தையும் இதுவரை நடத்தவில்லை என்றும், இதனால் நீதிபதிகளுக்கு யாரைச் சந்திப்பது என்பது கூட தெரியாத நிலை நிலவுவதாகவும் கூறித் தங்களது கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைச் செவ்வனே அமல்படுத்த வருவாய்த்துறைச் செயலாளரை ‘நோடல் அதிகாரியாக’ (Nodal Officer) நியமித்ததுடன், வரும் ஜூலை 31-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மரங்களை அகற்றுவது தொடர்பான தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். மேலும், அரசு நிலங்களில் சீமை கருவேல மரங்களைத் தங்களது சொந்தச் செலவில் அகற்ற அனுமதி கோரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
