கோழிப் பண்ணையாளர்கள் “தீவனக் கட்டுப்பாடு” உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிராய்லர் கறிகோழி சில்லறை விற்பனைக் கடைகளின் போராட்டமும் கடையடைப்பும் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோழிகளுக்கு அதிகளவில் தீவனம் வழங்கி எடையைச் செயற்கையாக உயர்த்தும் முறைகேடு தொடர்பாகக் கோழி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஏன்?
விற்பனைக்குக் கொண்டுவரப்படும் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமான தீவனங்களை வழங்கி எடையை உயர்த்துவதால், சில்லறை விற்பனையாளர்கள் கடுமையான நிதி நஷ்டத்தை அடைந்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நாளை முதல் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், “இனி கோழிகளுக்குக் கொடுக்கப்படும் தீவன அளவில் உரிய கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்” என்றும், செயற்கையாக எடையை உயர்த்தும் நடவடிக்கைகள் தவிர்க்கப்படும் என்றும் உற்பத்தியாளர்கள் உறுதியளித்தனர்.
விற்பனையாளர்கள் சங்கத்தின் விளக்கம்:
“உற்பத்தியாளர்கள் தரப்பில் தீவனக் கட்டுப்பாட்டைத் துல்லியமாகப் பின்பற்றுவதாக உறுதியான வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நாளை நடைபெறவிருந்த கடையடைப்புப் போராட்டத்தை முழுமையாக வாபஸ் பெறுகிறோம். நாளை முதல் கடைகள் வழக்கம்போல் இயங்கும்.”
பொதுமக்கள் நிம்மதி!
நாளை முதல் கறிகோழி கடைகள் அடைக்கப்படும் என்ற அறிவிப்பால் இறைச்சிப் பிரியர்களும் உணவக உரிமையாளர்களும் கவலையில் இருந்தனர். தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, வழக்கம்போல் கறிகோழி விற்பனை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் நிம்மதிய அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!
