தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் அனைத்துக் கறிகோழி விற்பனை கடைகளும் காலவரையற்ற முறையில் மூடப்படும் எனப் புதுச்சேரி கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. மொத்தக் கோழி பண்ணையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், கோழிகளுக்கு அதிகளவில் தீவனங்களை வழங்கி அதன் எடையைச் செயற்கையாக அதிகரித்துக் கொடுப்பதால், சில்லறை விற்பனையாளர்கள் கடும் நிதி நெருக்கடியையும் நஷ்டத்தையும் சந்தித்து வருவதாகக் கூறி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கடைகள் அடைப்பிற்கான பின்னணி என்ன?
இது தொடர்பாகப் புதுச்சேரி கறிகோழி விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியவதாவது, “கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களிடம் இருந்து நாங்கள் கோழிகளைக் கொள்முதல் செய்யும்போது, அவர்கள் கோழிகளுக்கு அதிக அளவிலான தீவனங்களை வழங்கி எடையை செயற்கையாக உயர்த்துகின்றனர். நாங்களும் அந்த எடையைக் கணக்கிட்டுப் பணத்தைக் கொடுத்துக் கொள்முதல் செய்து கடைகளுக்குக் கொண்டு வருகிறோம். ஆனால், சில மணி நேரங்களிலேயே கோழிகள் அந்தத் தீவனங்களைக் கழித்து விடுவதால், அதன் எடை கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதனால், சில்லறை விற்பனையாளர்களான எங்களுக்குத் தினசரி ஆயிரக்கணக்கில் பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது.”
காலவரையற்ற போராட்டம்
இந்தத் தீவன முறைகேடு குறித்து பலமுறை மொத்த விநியோகஸ்தர்களிடம் வலியுறுத்தியும், எந்தவித நேர்மறையான தீர்வும் எட்டப்படவில்லை என்று சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, வேறு வழியின்றி நாளை முதல் புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்துக் கறிகோழிச் சில்லறை விற்பனைக் கடைகளையும் மூடிப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதிர்ச்சி!
நாளை முதல் கறிகோழி கடைகள் மூடப்படும் என்ற திடீர் அறிவிப்பால், புதுச்சேரியில் உள்ள இறைச்சிப் பிரியர்களும், உணவக உரிமையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பிரச்சினையில் புதுச்சேரி அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
