தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் மற்றும் பின்பற்றாத கோவில்களைக் கண்டறிந்து வகைப்படுத்திப் பட்டியலிடுவதற்காகக் கூடுதலாக 5 மாத கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.


மனுதாரர்கள் தரப்பு வாதம் வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், “தமிழகத்தில் ஆகம விதிகள் கடைபிடிக்கும் மற்றும் கடைபிடிக்காத கோவில்களை முறையாக வகைப்படுத்திப் பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை அந்தப் பட்டியலை வெளியிடவில்லை; எனவே உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பு கோரிக்கை
இதற்குத் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. கருணாகரன் விளக்கம் அளிக்கையில், “தமிழகம் முழுவதும் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படும் மற்றும் கடைபிடிக்கப்படாத கோவில்களைக் கண்டறியும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதால், இந்தப் பணியை முழுமையாக முடிக்க 8 மாத கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
தமிழக அரசு கேட்ட 8 மாத கால அவகாசத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், கடுமை காட்டியதுடன் 5 மாதங்களுக்குள் ஆகம விதிகள் கடைபிடிக்கும் மற்றும் பின்பற்றாத கோவில்களைப் பிரித்து உரிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோவில்களை வகைப்படுத்தும் பணி ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக முடிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நிர்ணயிக்கப்பட்ட கெடு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
