தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. இதற்காக வரும் ஆகஸ்ட் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள தகவல், தேசிய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


மிரட்டல் மசோதாவும்… எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பும்!
மகளிர் இடஒதுக்கீட்டைச் சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிரடியாக 543-ல் இருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது சட்டத்திருத்த மசோதாவை கடந்த ஏப்ரல் மாதமே ஒன்றிய அரசு கொண்டுவர முயன்றது. ஆனால், “இது தென் மாநிலங்களின் குரல்வளையை நெரிக்கும் அப்பட்டமான வஞ்சகம்” என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடித்தன. தற்போது அதே மசோதாவை மீண்டும் உயிர்ப்பித்து, சிறப்புக் கூட்டத்தொடர் மூலம் நிறைவேற்றிவிட பாஜக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எண்கணித மோசடியும், குதிரைப் பேர அரசியலும்!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டத்திருத்தத்திற்குத் தேவையான 360 எம்பிக்களின் ஆதரவு பாஜகவுக்கு இல்லாத நிலையிலும், எதிர்க்கட்சி எம்பிக்களை வளைக்கவும், சுயேச்சைகள் மற்றும் நியமன உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் திரைமறைவு வேலைகள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜனநாயக மரபுகளைக் காற்றில் பறக்கவிட்டு, குறுக்கு வழியில் பெரும்பான்மையைக் காட்ட பாஜக முயல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாநிலங்கள் மீதான நேரடித் தாக்குதல்!
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைத் திறம்பட நடைமுறைப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குத் தண்டனை அளிக்கும் வகையில், அவற்றின் எம்பி தொகுதிகளின் விகிதாச்சாரத்தைக் குறைக்கும் சதி இதில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் பாஜகவின் இந்த ஜனநாயக விரோத நகர்வுக்கு எதிராகத் திரள எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருவதால், வரும் நாட்களில் தேசிய அளவில் பெரும் அரசியல் போர்க்களம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
