புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல அதிரடியான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காலதாமதமின்றிப் படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், பட்ஜெட் முழுமையான திருப்தியைத் தரவில்லை என்றும் அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள் என்னவானது? – எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைந்ததாகக் குற்றச்சாட்டு
புதிய கட்சி, புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளதால் ஏராளமான நலதிட்டங்களும் அறிவிப்புகளும் வெளியாகும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகள் பல இடங்களில் பொய்த்துப் போயுள்ளதாக வீரபாண்டியன் தெரிவித்தார். குறிப்பாக, தவெக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனுக்காகக் கொடுத்த வாக்குறுதிகளை அரசு எத்தகைய சிரமங்கள் இருப்பினும் படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாநிலங்களுக்குரிய நிதியை ஒன்றிய அரசு தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மீனவர் நிவாரணத் தொகை குறைப்புக்கு எதிர்ப்பு!
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி ₹8,000 ஆக இருந்த நிலையில், தற்போது அது ₹7,000 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதாகக் கவலை தெரிவித்த அவர், இதனை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றார். இயற்கையோடும், இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல்களோடும் போராடித் பிழைக்கும் மீனவர்களுக்கு, வேலை இல்லாத காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பெயர் மாற்றம் மட்டுமே செய்யும் ‘ஜிக்-ஜாக்’ அரசியல்!
முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றிவிட்டு, ‘அண்ணன் சீர்’, ‘தாய்மாமன் சீர்’ என்ற ரீதியில் புதிய பெயரிட்டு அரசாங்கம் செயல்படுவதாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், பெயர்கள் மாறுவது பெரிய பிரச்சினை அல்ல என்றாலும், முந்தைய அரசின் எந்தவொரு நலத்திட்டமும் எதன் பொருட்டும் கைவிடப்படக்கூடாது என்பதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் இந்தியாவில் எப்போதுமே முதலிடத்தில் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வித் துறைக்கு நிதி குறைப்பு – வன்மையாகக் கண்டனம்!
பள்ளி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதைக் கடுமையாகச் சாடிய வீரபாண்டியன், ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க அடித்தளமாக விளங்குவது கல்வி மட்டுமே என்றார். சமூக அமைப்பை மாற்றவும், விடுதலைப் போராட்ட முன்னோர்களின் கனவுகளை நனவாக்கவும் கல்விக்கு எவ்வளவுதான் நிதிச் சிரமங்கள் இருந்தாலும் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காகத் தமிழக அரசு ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அமர்த்தியா சென் கூற்றுப்படி பட்ஜெட் அமைய வேண்டும்
ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டை முழுமையாக மோசம் என்று கூறிவிட முடியாது என்றாலும், இது முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியதைப்போல, உலக வங்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொள்ளாமல், உழைக்கும் விவசாயிகள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டிய வயிறையும், குழிவிழுந்த கண்ணங்களையும் பார்த்து அரசு பட்ஜெட் போட வேண்டும் என வீரபாண்டியன் எச்சரித்துள்ளார்.
