தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.


”இது முதிர்ச்சியற்ற செயல்” தொகுதி மறுவரையறை மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில், அது குறித்து விவாதிப்பது காலத்திற்கு முந்தியது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவர், “பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைக்க முடியாது; அந்த குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்த பிறகுதான் பெயர் சூட்ட முடியும். எனவே, மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகுதான் திமுக தனது தெளிவான நிலைப்பாட்டை எடுக்கும்” என்றார்.
மசோதாவில் தென் மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும், கடந்த காலங்களிலேயே இது தொடர்பாக மத்திய அரசிடம் திமுக தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேகதாது விவகாரம்: திசை திருப்பும் நாடகம்? மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டத் தயங்குவதாகவும் அவர் விமர்சித்தார். “காவிரி டெல்டா பகுதியில் தாகத்தில் இருக்கும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல், தேவையற்ற விஷயங்களைப் பேசி மக்கள் கவனத்தைத் திசை திருப்ப அரசு நாடகம் ஆடுகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.
”திமுகவின் நிலைப்பாடு உறுதி”
திமுக எடுக்கும் எந்தவொரு முடிவும் தமிழகத்தின் நலனை முன்னிறுத்தியே இருக்கும் என்று கூறிய ஆர்.எஸ். பாரதி, “ஜனநாயகத்தைக் காப்பதில் திமுக எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. எமர்ஜென்சி காலத்திலேயே அதிகாரத்தை விட ஜனநாயகமே முக்கியம் என்று கருதி சிறை சென்ற இயக்கம் எங்களது. அதேபோல, தொகுதி மறுவரையறை விஷயத்திலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சி எம்பிகளுடன் ஆலோசனை நடத்தி, தமிழகத்திற்கும் தென் மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகச் சரியான முடிவை எடுப்பார்” என்று தெரிவித்தார்.
மேலும், ஆளும் தரப்பு மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்காமல் மௌனம் காப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விகளுக்காவது அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பேப்பர் படிச்சா மட்டும் போதாது”: சட்டப்பேரவையில் உதயநிதி – முதல்வர் விஜய்க்கு இடையே காரசார விவாதம்!
