- Advertisement -
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அளவுகோல் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை (PWD) முன்னாள் ஊழியர் சாகுல் அமீத், மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் பணியில் இருந்தபோது 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை என் மீது வழக்குப்பதிவு செய்தது. துறை ரீதியான விசாரணையில் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலுவை வழக்கு விவரங்கள்:
இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றிருந்தன:
- வழக்குகளின் நிலவரம்: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சேர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்ந்த 2,423 வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுச்சேரியில் 61 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- சிறப்பு நீதிமன்றங்கள்: ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது 8 சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
- மாவட்டவாரியாக நிலுவை: சென்னை – 359, கோயம்புத்தூர் – 138, மதுரை – 140, சேலம் – 93, சிவகங்கை – 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளைக் கருத்தில் கொண்டு, கூடுதல் அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக நியமிப்பது குறித்த அறிக்கை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட அதிகாரம் மிக்க குழுவின் முன்பாக பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதியின் அதிரடி கேள்விகள்:
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, எடுக்கப்பட்ட ஆரம்ப நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த அதேவேளையில், முக்கியமான சில கேள்விகளை எழுப்பினார்:
“போக்ஸோ (POCSO) வழக்குகளைப் பொறுத்தவரை, ஒரு மாவட்டத்தில் 100 வழக்குகள் இருந்தால் அங்குச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற தெளிவான வரையறை உள்ளது. அதேபோல, லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கு எந்த அளவுகோலின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கிறோம்? ஒவ்வொரு மாவட்டத்திலும் லஞ்ச ஒழிப்பு வழக்கு விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக உரிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
