சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் முகமூடி அணிந்து புகுந்து 75 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து, தம்பதியை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில், கார் ஓட்டுநர் உள்பட 7 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 24 பவுன் தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ந்த திகைப்பூட்டும் சம்பவம்:
சிவகாசி ஐயப்பன் காலனியைச் சேர்ந்த அச்சகம் மற்றும் அங்காடி நடத்தி வரும் தொழிலதிபர் அரவிந்த் ராம் என்பவரது வீட்டில் கடந்த ஜூலை 5-ம் தேதி நைட்டரவூடு முகமூடி அணிந்த கும்பல் காரில் வந்து கைவரிசை காட்டியது. வீட்டில் இருந்த 75 பவுன் நகை மற்றும் ரூ.10,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்ததுடன், அதனைத் தடுக்க முயன்ற அரவிந்த் ராம் மற்றும் அவரது மனைவியை ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டுத் தப்பியோடினர்.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் குறித்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபிநவ்குமார் நேரில் ஆய்வு நடத்திட, சிவகாசி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
துப்புத் துலக்கிய தனிப்படை போலீசார்:
கொள்ளையர்கள் தப்பியோடப் பயன்படுத்திய காரின் எண் மற்றும் அப்பகுதியில் பதிவான செல்பேசி சிக்னல்களைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கொள்ளை கும்பல் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தது என்பதும், அவர்கள் ஏற்கனவே சிவகாசியில் பல நாட்களாக முகாமிட்டிருந்து சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
உறுதுணையாக இருந்தவர்கள் கைது: இவர்களுக்கு அடைக்கலம் வழங்கி கொள்ளைக்கு உதவியதாகத் தூத்துக்குடி ஆசீர்வாதம் நகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (24), பிரித்விராஜன் (28), சோமசுந்தரம் (24), டி.எம்.பி. காலனி பேச்சிமுத்து (21) ஆகிய 4 பேரை முதற்கட்டமாகப் போலீசார் கைது செய்தனர்.
கார் ஓட்டுநர் மற்றும் முக்கியக் குற்றவாளிகள் பிடிபட்டனர்: தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும், அதில் தொடர்புடைய திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரசாந்த் (30), திருநெல்வேலி சேரன்மாதேவி ராஜகோபால் என்ற ராஜா (27), மானூர் சுபாஷ் (29) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து முதற்கட்டமாக 24 பவுன் தங்க நகைகளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்கவும், மீதமுள்ள நகைகளை மீட்டெடுக்கவும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே அதிர்ச்சி: சொத்து தகராறில் பெத்த தாயை டம்பள்ஸால் அடித்துக் கொன்ற மகன் கைது!
