லஞ்ச ஒழிப்புத்துறையின் முன்னாள் இயக்குநர் அருண் ஐ.பி.எஸ், அவரது மனைவி மற்றும் மகள்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் விவரம்:
புகாரளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சவுக்கு சங்கர், முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியான அருண் ஐ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டார்:

மயிலாப்பூரில் ‘வெங்கடேச பெருமாள் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. அருண் ஐ.பி.எஸ்-ன் மனைவி மற்றும் மகள்கள் பெயரில் உள்ள இந்நிறுவனம் கடந்த ஆண்டு 65 லட்ச ரூபாய் நஷ்டம் காட்டப்பட்டுள்ள நிலையில், இந்நிறுவனத்திற்கு வேறு யாரோ 24 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதேபோன்று பல நிறுவனங்களைப் பினாமி பெயரில் அவர் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.![]()
அருண் ஐ.பி.எஸ்-ன் மனைவியும், ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான யமுனாதேவி, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் தீர்ப்பாயத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருவதாகவும், அவரும் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடான முறையில் பெருமளவில் சொத்து சேர்த்துள்ளதாகவும், ரௌடிகள் மற்றும் குண்டர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும் அவர் மீது மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிந்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சவுக்கு சங்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தபால் மூலமாகப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
