உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகனைப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ரூ.60 கோடி மதிப்பிலான நில மோசடி பின்னணி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோயில் வழிபாட்டுச் சேவைகளுக்காகவும், அறக்கட்டளை நற்பணிகளுக்காகவும் கடந்த 1930-ஆம் ஆண்டு சுமார் 1.79 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் ரூ.60 கோடி பெறக்கூடிய இந்த நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து, முறைகேடாகப் பட்டா மாற்றம் செய்து விற்பனை செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வட்டாட்சியர் முதல் துணை ஆட்சியர் வரை…
போலீசாரின் விசாரணையில், இந்த நில மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் மதுரையில் வட்டாட்சியராக (Tahsildar) பணியாற்றிய அன்பழகன், போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்ய முழு உடந்தையாக இருந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அன்பழகனைக் காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நில நிதிப் பிரிவின் சிறப்பு நேர்முக உதவியாளராகப் (துணை ஆட்சியர் நிலையில்) பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
குற்றவியல் வழக்கில் அரசு அதிகாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசுப் பணி விதிகளின் கீழ் துணை ஆட்சியர் அன்பழகனைப் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. கோவில் சொத்துக்களைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற பிரம்மாண்ட நில மோசடி வழக்கில், உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக வருவாய்த் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் பரபரப்பு: கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஆசிரியையைத் தாக்கிய தவெக பிரமுகர் கைது!
