விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1984–1985ஆம் ஆண்டுகளில் அரும்பட்டு ஊராட்சியில் இருந்து கீரிமேடு பகுதி தனி ஊராட்சியாக அரசால் பிரிக்கப்பட்டது. அப்போது அரசு வழங்கிய புல எண்கள் மற்றும் வரைபட ஆவணங்களின் அடிப்படையில், தங்களது நிலங்களை முறையாக அளந்து எல்லைக்கற்கள் அமைத்து, கீரிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அரசு அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

அதிகாரிகள் அலட்சியம்:
இதுதொடர்பாக பல ஆண்டுகளாக வருவாய்த் துறை மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும், கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசின் கவனத்தை ஈர்க்க நூதன போராட்டம்:
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தங்களது கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் ஒன்றுதிரண்டு ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் ஆவணங்களின்படி கிராமத்தின் எல்லைகளை முறையாக அளந்து அத்துக்காட்ட வேண்டும் என முழக்கமிட்டனர்.
மேலும், தங்களது நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை பல்வேறு கட்டங்களாகப் போராட்டங்கள் தொடரும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்க பொதுமக்கள் நடத்தியுள்ள இந்த வித்தியாசமான போராட்டம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
