தினமும் 21,413 கன அடி நீர் திறக்கக் கோரிக்கை! ஆகஸ்ட் 31-க்குள் 36.635 டி.எம்.சி நீரை உறுதி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய உத்தரவை எதிர்த்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனடியாகத் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரியில் நாள்தோறும் வினாடிக்கு 12,000 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த அளவு தமிழகத்தின் தற்போதைய விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்பதால், ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
36.635 டி.எம்.சி நீர் தேவை: மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள்
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

• விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர்: ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான காலத்திற்கு, மழைப் பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டு விகிதாச்சார அடிப்படையில் தினமும் வினாடிக்கு 21,413 கன அடி நீர் வீதம் திறக்க உத்தரவிட வேண்டும்.
• பற்றாக்குறை நீர் கணக்கீடு: இவ்வாறு தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில், தமிழகத்திற்கு இதுவரை கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 15.278 டி.எம்.சி. மற்றும் தற்போதைய விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய 21.357 டி.எம்.சி. நீர் கிடைக்கப்பெறும்.
• மொத்தக் கோரிக்கை: வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மொத்தம் 36.635 டி.எம்.சி நீரைத் தமிழகத்திற்குக் கர்நாடகம் வழங்குவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
குறுவை சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் தவிப்பு
மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, “ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கர்நாடகம் வழங்க வேண்டிய பற்றாக்குறை நீரைச் சரியாகத் திறந்து விட்டிருந்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 டி.எம்.சி.யாக உயர்ந்திருக்கும். அவ்வாறு நீர்மட்டம் உயரும் பட்சத்தில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காகத் தண்ணீரைத் தடையின்றித் திறந்திருக்க முடியும். தற்போது லட்சக்கணக்கான விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்காகக் காவிரியின் வர எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, தமிழகத்தின் வாழ்வாதார உரிமையைக் கருத்தில் கொண்டு, கர்நாடகா உடனடியாகத் தண்ணீரைத் திறந்து விடுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.” என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த கூடுதல் மனு விரைவிலேயே விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
