கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி, இழப்பீட்டுத் தொகையைத் திருத்தி சுமார் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவத்தில் உடந்தையாக இருந்த அவரது மகன் மற்றும் உறவினருக்குத் தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு, கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விபத்து வழக்கு ஒன்றில் ₹10,565 இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அப்போதைய நீதிமன்றப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த அறிவுச்செல்வி என்பவர், இந்த உத்தரவு நகலைத் திருத்தி, நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு ₹4,78,000 தொகையைத் தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதே முறையைப் பின்பற்றி, விபத்து வழக்குகள் உள்ளிட்ட ஆறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளைத் திருத்தி, மொத்தம் ₹38,79,982 தொகையைத் தனது பெயரிலும், தனது மகன் வரதராஜன் மற்றும் உறவினர் தமிழரசன் ஆகியோரின் பெயரிலும் சட்டவிரோதமாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

வங்கிக் காசோலையால் வெளிவந்த உண்மை
வழக்கின் காசோலையில் உள்ள கையொப்பத்தில் சந்தேகம் இருப்பதாக வங்கி மேலாளர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி (CB-CID) போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2021-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற விசாரணை மற்றும் அதிரடி தீர்ப்பு
கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் தீவிரமாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, 3 மாவட்ட நீதிபதிகள் உட்பட அரசு தரப்பில் 44 சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவசந்திரன் ஆஜராகி வாதிட்டதுடன், 103 ஆவணங்கள் சான்று ஆவணங்களாகத் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 நாட்கள் நடைபெற்ற இந்த விரிவான விசாரணைக்குப் பிறகு, நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்,
- முதல் குற்றவாளி (அறிவுச்செல்வி): 9 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹31,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
- உடந்தையாக இருந்தவர்கள் (வரதராஜன் & தமிழரசன்): 8 பிரிவுகளின் கீழ் தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ₹12,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
“வேலியே பயிரை மேய்ந்த கதை” போல, நீதி வழங்கும் கோயிலாகத் திகழும் நீதிமன்றத்திலேயே பணியாற்றிய ஊழியரே நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் போட்டுக் கைவரிசை காட்டியுள்ள இச்சம்பவமும், அதற்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனையும் கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் பரபரப்பு: அரசுப் பள்ளி வகுப்பறையில் 12-ஆம் வகுப்பு மாணவர் மீது சக மாணவர் கத்திக்குத்து!
