மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஏற்றிய தேசியக் கொடியின் கயிறு அறுந்து தொங்கிய சம்பவம் மற்றும் கலை நிகழ்ச்சியின்போது திடீரென மின் தடை ஏற்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடி அறுந்து விழுந்த அவலம்:
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக கொடியின் மேல் பகுதியில் கயிறு அறுந்து, தேசியக் கொடி கீழே தொங்கியது.

இதனைத் தொடர்ந்து, கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திச் சலூட் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைமையை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாகத் தேசியக் கொடியைக் கீழே இறக்கிக் கயிற்றைச் சரிசெய்தனர். பின்னர், காவல்துறையினர் இரண்டாவது முறையாக மீண்டும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி அறுந்து விழுந்த இச்சம்பவம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின் தடையால் கலை நிகழ்ச்சியில் தொய்வு:
இதனைத் தொடர்ந்து, விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட மின் தடை காரணமாக ஒளியமைப்பு மற்றும் இசை நின்றது. இதனால் நடனமாடிக் கொண்டிருந்த மாணவ-மாணவிகள் பாதியிலேயே திகைத்து நின்றுவிட்டனர்.
இந்த எதிர்பாராத மின் தடையால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கடும் எரிச்சலடைந்தனர். உடனே களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, உடனடியாக ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கின.
சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி கயிறு அறுந்ததும், அடுத்தடுத்து ஏற்பட்ட மின் தடையாலும் மகிழ்ச்சியில் முடியவேண்டிய நிகழ்ச்சி, வெறுப்பில் முடிந்தது.
