ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் பேச்சால் ஆவேசமடைந்த கிராமப் பெண்கள் வெப்படை நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெப்படை அடுத்துள்ள எலந்தகுட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட ரங்கனூர் நால்ரோடு பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களும் தவெகவின் புதிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

தவெக நிர்வாகிகளுடன் காரசார வாக்குவாதம்: கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரெனத் தவெக நிர்வாகிகளைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். தங்களது பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு குறித்து அவர்களிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி, காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: “தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், எங்கள் பகுதியில் இதுவரை குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை; முறையாகத் தண்ணீரும் விநியோகிக்கப்படுவதில்லை. இந்தக் குடிநீர் சிக்கலுக்குப் புதிய அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.”
பெண்களின் வேதனை குற்றச்சாட்டு:கூட்டத்தின் போது பத்திரிகையாளர்களிடம் தங்கள் மனக்குறைகளை வெளிப்படுத்திய பெண்கள், “நாங்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் சென்று குடிநீர் தட்டுப்பாடு குறித்து முறையிட்டால், ‘நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தானே வாக்களித்தீர்கள், அவர்களிடம் போய் கேளுங்கள்’ எனப் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கின்றனர்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் சமாதானம்: பொதுமக்களின் திடீர் முற்றுகைப் போராட்டத்தால் கிராம சபை கூட்டத்தில் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. இதனையடுத்து தவெக நிர்வாகிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய அதிகாரிகளுடன் பேசித் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அமைதியடைந்தனர். கிராம சபை கூட்டத்திலேயே ஆளுங்கட்சி நிர்வாகிகளை மக்கள் முற்றுகையிட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
