பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழிலகத்தில் திரண்ட பணியாளர்கள்:
நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி எழிலக வளாகத்தில் ஒன்றுகூடினர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது எனக் கூறி, அவர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

எந்த ஆட்சியிலும் இப்படி நடந்ததில்லை!” – ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் வேதனை: போராட்டம் குறித்துப் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தினக்கூலி பணியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“நாங்கள் பணிபுரியும் சொந்த அலுவலக வளாகத்திலேயே எங்களைப் பேசக் கூட விடாமல் அப்புறப்படுத்துகிறார்கள். இது எந்த ஆட்சியிலும் நடந்ததில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் நிலையில், வெறும் 20 பேரை மட்டுமே அரசு பணி நிரந்தரம் செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இறந்துவிட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால் யாருக்கும் பணி நிரந்தரம் கிடைக்கவில்லை. அனைத்து துறை அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் முறையிட்டும் பலனில்லை. இனி நாங்கள் யாரிடம் சென்று கோரிக்கை வைப்பது?”
மாற்றுத்திறனாளி மகளின் உருக்கமான கோரிக்கை:
போராட்டத்தில் பங்கேற்ற சீதாலட்சுமி, கனகா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை விவரித்தனர். அப்போது பேசிய ஒரு மாற்றுத்திறனாளி பெண், “எனது தந்தை 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுப்பணித்துறையில் தினக்கூலியாக உழைத்து வருகிறார். குடும்பத்தைக் காப்பாற்றப் போராடி வரும் அவரை அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என உருக்கமாகக் கோரிக்கை வைத்தார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை அரசு உடனடியாகச் செவிமெடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
