திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நாளை விளக்கம் அளிக்குமாறு நெல்லைக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் எதிர்ப்புப் பேரணி வழக்கு:
நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழகத்தினர் நடத்தத் திட்டமிட்டிருந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்குக் காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. இதனை எதிர்த்துத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், பேரணி குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையீடு:
இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, நீட் எதிர்ப்புப் பேரணி தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்தார்.
அப்போது கூடுதல் தகவலாக, திருநெல்வேலி குலவணிகர்புரத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ என்பதாவது ஆண்டு விழா மாநாட்டிற்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளதாக நீதிபதியிடம் முறையீடு செய்தார்.
நீதிபதி கேள்வி & இடைக்கால உத்தரவு:
மனுதாரரின் முறையீட்டைக் கேட்ட நீதிபதி, திராவிடர் கழக தலைவர் பங்கேற்கும் மாநாட்டிற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான தெளிவான காரணங்கள் குறித்துக் காவல் துறை தரப்பில் நாளை (ஆகஸ்ட் 19) விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
