மதுரையில் காவல் துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனை பிணவறையில் மாவட்ட நீதிபதி உடலை ஆய்வு செய்து குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
சம்பவத்தின் பின்னணி:
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் பரமசிவம் (55). பூசாரியான இவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜூலை 18-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாகச் சிந்தாமணி காவல் நிலையப் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பரமசிவத்தைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், பரமசிவம் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்பத்தினரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு:
கடந்த ஆகஸ்ட் 5 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, “வீட்டில் கீழே விழுந்ததால் காயமடைந்தேன்” என பரமசிவம் கூறியிருந்தார். ஆனால், சிந்தாமணி காவல் நிலையப் போலீசாரின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாகவே பரமசிவம் மருத்துவமனையில் பொய் சாட்சியம் அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும், அவரது உயிரிழப்பிற்குப் போலீசாரின் கொடூரத் தாக்குதலே காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு & நடவடிக்கை கோரிக்கை:
இச்சம்பவம் தொடர்பாகப் பரமசிவத்தின் குடும்பத்தினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர மனுத்தாக்கல் செய்தனர். அம்மனுவில் பரமசிவத்தை சித்திரவதை செய்து தாக்கிய சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர்கள் ஆனந்த் மற்றும் அப்துல் முகமது ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழப்பு குறித்து நடுநிலை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பிணவறையில் நீதிபதி நேரடி விசாரணை:
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாவட்ட நீதிபதியின் நேரடி மேற்பார்வையில் உடற்கூறாய்வு (Autopsy) நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை மாவட்ட 5-வது நடுவர் மன்ற நீதிபதி லட்சுமிபிரியா இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு நேரில் சென்று பரமசிவத்தின் உடலை ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த பரமசிவத்தின் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டார்.
காவல் துறையினரின் அத்துமீறலால் பூசாரி உயிரிழந்ததாக எழுந்த செய்தி மதுரையில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
