தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (எம்.எல்.ஏ) அரசு சார்பில் புதிய வாகனங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் பல்வேறு விவாதங்கள் எழும்பி வருகின்றன. இந்நிலையில், செஞ்சி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், இந்த விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ கணேஷ்குமார், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்குவதற்குப் பதிலாக, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார பின்னணி மற்றும் நிதிநிலையை ஆய்வு செய்து, உண்மையில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் கார்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே வசதியான பின்னணி கொண்ட உறுப்பினர்களுக்கு மக்கள் பணத்தில் இருந்து கார்கள் வழங்குவதைத் தவிர்த்து, பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் இந்த வசதி அளிக்கப்படுவதே சரியானது என்று அவர் சுட்டிக்காட்டினார். அரசின் பொது நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நடுநிலையான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
