கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை, கணவன் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளி அருகே உள்ள கும்ளாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (39), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வித்யா (30). இவர்களுக்குக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கார்பெண்டர் புனித் என்பவருடன் வித்யாவிற்கு கடந்த ஒரு வருடமாகப் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த நாராயணசாமி மனைவியைக் கண்டித்தும், ஊர் பெரியோர்கள் முன்னிலையில் சமரசம் செய்தும் வித்யா தன் நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

ரூ. 22 லட்சத்துடன் மாயமான மனைவி
நாராயணசாமிக்குக் கடன்கள் இருந்த நிலையில், தனக்குச் சொந்தமான 8 செண்ட் நிலத்தை மனைவி வித்யாவின் பெயரில் எழுதி வைத்திருந்தார். இதில் 1,500 சதுர அடி நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த அம்ரீஷ் என்பவருக்கு ரூ. 22 லட்சத்திற்கு வித்யா விற்பனை செய்துள்ளார். நிலத்தை விற்ற பணத்தைப் பெற்றுக்கொண்ட வித்யா, கணவர் மற்றும் குழந்தைகளைக் கைவிட்டு, கள்ளக்காதலன் புனித்துடன் கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
வங்கி வாசலில் நடந்த கொடூரம்
இந்நிலையில், நேற்று மதியம் கும்ளாபுரத்தில் உள்ள பல்லவன் வங்கிக்குத் தனது சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வித்யா வந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த நாராயணசாமி, வித்யாவிடம் நிலம் விற்ற பணத்தைத் தருமாறும், மீதமுள்ள சொத்தைக் குழந்தைகளின் பெயரில் எழுதி வைக்குமாறும் கேட்டுத் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து அவரை வங்கியிலிருந்து வெளியே அழைத்து வந்த நாராயணசாமி மீண்டும் வற்புறுத்தியபோது, அதற்கு வித்யா காரசாரமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமி, தரையில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வித்யாவின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். தாக்குதலிருந்து தப்பி ஓட முயன்ற வித்யாவை மீண்டும் கல்லால் பலமாகத் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை & கைது
தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் மற்றும் தளி காவல் ஆய்வாளர் பெரியதம்பி தலைமையிலான போலீசார், வித்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய நாராயணசாமியைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், “குடும்பக் கடனை அடைக்கவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் சொத்தைக் கேட்டபோது வித்யா தர மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்” என நாராயணசாமி வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் கும்ளாபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
