பரந்தூர் புதிய பசுமை வழி விமான நிலையத் திட்டம் என்பது பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகே முடிவு செய்யப்பட்டது என்றும், தனிநபர் விருப்பத்திற்காகவோ உள்நோக்கத்துடனோ தேர்வு செய்யப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு இடங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்?
சட்டப்பேரவையில் இன்று பேசிய தங்கம் தென்னரசு, “சென்னை நகரின் புவியியல் அமைப்பைக் கருத்தில் கொண்டால், விமான நிலையத்தை வேறு எந்த இடத்திற்கும் மாற்றுவது எளிதான விஷயம் அல்ல. இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) வழிகாட்டுதலின்படி சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன” என்றார்.

மேலும், “கிழக்கில் வங்கக்கடலும், வடக்கில் மணலி, எண்ணூர் தொழிற்சாலைகள் மற்றும் பழவேற்காடு ஏரியும் இருப்பதால் சாத்தியமில்லை. தெற்கே சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளி, கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் வேடந்தாங்கல் சரணாலயம் ஆகியவற்றிற்கு அருகில் இருப்பதால் நிராகரிக்கப்பட்டன. அதனாலேயே மேற்குப் பகுதியில் உள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஒப்பீடு செய்யப்பட்டு, இறுதியாகப் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது” எனச் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்ப மற்றும் சமூக அளவுகோல்கள்
உயரழுத்த மின்கம்பிகள், தொழிற்சாலைகள், நிலத்தின் விலை மற்றும் குறைந்த அளவிலான மக்களே பாதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொண்டே பரந்தூர் முடிவு செய்யப்பட்டது. மாநில அரசு மட்டுமின்றி, ஒன்றிய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகமும் இதற்குப் பின்னரே ஒப்புதல் அளித்தது.
மாற்று இடங்கள் மற்றும் சென்னை விமான நிலைய விரிவாக்கம்
“தற்போது மீண்டும் புதிய இடத்தை ஆய்வு செய்தால் அங்கும் இதே போன்ற விவசாய நிலங்கள், மக்கள் பாதிப்பு போன்ற சிக்கல்கள் எழும். இதனால் திட்டம் பல ஆண்டுகள் பின்தங்கிவிடும். அதேபோல, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றி மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் அங்கு 2-வது ஓடுபாதை அமைப்பதோ அல்லது விரிவுபடுத்துவதோ சாத்தியமற்றது” என்றும் அவர் விளக்கமளித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம்
“ஏற்கனவே 2,500-க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதகமாக அமையும். தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் எனக் கூறிக் கொண்டே முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடானது. எனவே பரந்தூர் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
அவையில் அத்துமீறினால் கடும் நடவடிக்கை: பேரவையில் சபாநாயகர் இறுதி எச்சரிக்கை!
