தேவாஷிஷ் மக்கிஜா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காந்தாரி’ திரைப்படம் திருட்டு கதை சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அதற்கான விளக்கத்தைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளனர்.
இப்படத்தில் டாப்ஸியுடன் இஷ்வாக் சிங், ஸ்வஸ்திகா முகர்ஜி, மிதா வசிஷ்ட் மற்றும் சாயா கதம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடத்தப்பட்ட தன் மகளை மீட்டெடுக்கப் போராடும் ஒரு தாயின் உணர்ச்சிப்பூர்வமான ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

எழுத்தாளர் கல்யாண் பண்டி குற்றச்சாட்டு
படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ‘காந்தாரி’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. எழுத்தாளர் கல்யாண் பண்டி என்பவர், 2019-ஆம் ஆண்டில் ‘காந்தாரி’ என்ற அதே தலைப்பில் தான் எழுதி பதிவு செய்து வைத்திருந்த கதைக்கும், டாப்ஸியின் படத்திற்கும் இடையே அதிக ஒற்றுமைகள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், அக்காலத்தில் ‘வூட்’ (Voot) நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் மோனிகா ஷெர்கில்லிடம் இக்கதையைக் கூறியிருந்ததாகவும், எனவே தனக்கு உரிய காப்புரிமை மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படக்குழுவினரின் அதிரடி விளக்கம்
இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் மும்பையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்களின் இயக்குநர் ருசிகா கபூர் ஷேக் பேசுகையில், “குற்றம் சாட்டப்பட்ட கதையும் எங்களுடைய கதையும் முற்றிலும் வேறுபட்டவை. இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த நாங்கள் விரும்பவில்லை. திரைப்படம் வெளிவரும் போது உண்மை என்ன என்பது உங்களுக்கே தெளிவாகப் புரியும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து படத்தின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான கனிகா தில்லான் பேசுகையில், “நான் முதன்மையாக ஒரு எழுத்தாளர், அதற்குப் பிறகே தயாரிப்பாளர். எனவே மற்றொரு எழுத்தாளரின் உணர்வுகளை நான் முழுமையாக மதிக்கிறேன். ஆனால் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், குற்றம் சாட்டியுள்ள அந்த எழுத்தாளரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை; அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. படம் திரைக்கு வரும் போது உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்” என்று கூறினார். படக்குழுவினரின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து ‘காந்தாரி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
டாக்ஸிக் விமர்சனம்: கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா? யஷ் – கீது மோகன்தாஸ் கூட்டணி எப்படி இருக்கு?
