தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யும் டெண்டரில், விதிகளின் வழிகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தனியார் நகைக் கடை நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டு பல நூறு கோடி ரூபாய் லாபம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளர் கிருஷ்ணவேணி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


கடத்தல் தங்கமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இத்திட்டத்திற்கான டெண்டரை ‘ஜாய் ஆலுக்காஸ்’ நிறுவனம் வெறும் ஒரு பைசா (₹0.01) சேவைக் கட்டணத்தில் கைப்பற்றியதாகச் செய்திகள் வெளியாயின. துபாயில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை இதில் பயன்படுத்திப் பணமாக மாற்றுகிறார்கள் எனச் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், 4,40,000 மோதிரங்களுக்குத் தேவையான சுமார் 450 கிலோ தங்கத்தைக் கடத்தி வருவது நடைமுறையில் சாத்தியமற்றது. அதேபோல, பழைய தங்க கையிருப்பை விற்பனை செய்வதும் நிறுவனத்தின் சொத்து மதிப்பீட்டுக் கணக்குகளில் (Asset Value) பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதில் லாபம் ஈட்ட முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அரசுப் பங்குள்ள ‘டைட்டன்’ புறக்கணிப்பு ஏன்?
அரசு இத்திட்டத்திற்குத் தனியாரை நாடாமல் ‘டைட்டன்’ (Titan) நிறுவனத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். தமிழக அரசின் 28 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள டைட்டன் நிறுவனத்திற்கு இத்திட்டத்தைக் கொடுத்திருந்தால், அதில் கிடைக்கும் லாபத்தில் 28 சதவீதம் மீண்டும் அரசுப் கருவூலத்திற்கே திரும்பக் கிடைத்திருக்கும். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பங்களிப்பு நிறுவனத்தைப் புறக்கணித்துவிட்டுத் தனிநபர்களுக்கு டெண்டர் விட்டதிலேயே பெரும் சந்தேகம் எழுகிறது.

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட டெண்டர் விதிகள்
ஆரம்பத்தில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹13,000 என நிர்ணயிக்கப்பட்டு, சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் எதுவாக இருந்தாலும் டெண்டர் எடுப்பவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் டெண்டர் விதிகள் மாற்றப்பட்டன. தங்கத்தின் விலையை ‘IBJA’ (Indian Bullion and Jewellers Association) நிர்ணயிக்கும் சந்தை விலையிலேயே அரசே நேரடியாக ஏற்றுக்கொள்ளும் என்றும், நிறுவனங்கள் தங்களின் சேவை, தயாரிப்பு மற்றும் போக்குவரத்து கட்டணங்களுக்கு (Service & Transportation) மட்டும் கொட்டேஷன் அளிக்கலாம் என்றும் திருத்தப்பட்டது.
இதை முன்கூட்டியே கணித்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், 1 பைசா மட்டுமே சேவைக் கட்டணமாகக் கேட்டு L1 (குறைந்த விலை புள்ளியாளர்) ஆகத் தேர்வானது.

வருடத்திற்கு ₹45 கோடி வரை நேரடி லாபம்?
இந்த வித மாற்றத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய வணிகத் தந்திரம் ஒளிந்துள்ளது:
பொதுமக்களிடம் தங்கம் கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, “பழைய தங்கத்தை எங்களிடமே விற்று விடுங்கள்” என அந்நிறுவனம் விளம்பரங்களைச் செய்யத் தொடங்கியது.
விலை வித்தியாசம்: பொதுமக்கள் பழைய தங்கத்தை விற்கும்போது, சந்தை விலையை விடக் கிராமுக்குச் சுமார் 10% வரை கழித்தே கடைகள் பெற்றுக்கொள்ளும் (கிராமுக்கு ₹1,000 வரை குறைவு).
அரசிடம் விற்பனை: மக்களிடம் குறைந்த விலைக்குக் வாங்கும் அதே தங்கத்தை, அரசு நிர்ணயித்துள்ள முழுமையான IBJA சந்தை விலைக்கு அரசிடமே விற்பனை செய்கிறார்கள்.
லாபக் கணக்கு: ஒரு கிராமுக்குச் செலவுகள் போகக் குறைந்தது ₹1,000 வரை நேரடி லாபம் கிடைக்கும். 4,40,000 மோதிரங்கள் (சுமார் 4.5 லட்சம் கிராம்) விநியோகிக்கும்போது, ஆண்டுக்குச் சுமார் ₹45 கோடி வரையிலும், 5 ஆண்டுகளில் ₹250 கோடி வரையிலும் நேரடியாக லாபம் ஈட்ட முடியும்.
சட்டப்படி நடந்த ‘விஞ்ஞான ஊழல்’
தற்போது மற்றொரு முன்னணி நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸும் இந்த வணிக நுட்பத்தைப் புரிந்துகொண்டு L1 விலைக்கு இணைய ஒப்புக்கொண்டு, தங்கத்தை விற்கக் கோரி விளம்பரங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. “அரசு நினைத்தால் பொங்கலுக்குக் கரும்பு, அரிசி வழங்குவது போலத் தங்கத்தையும் வழங்க முடியும். ஆனால், சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே இந்தச் சலுகை ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஒரு ரூபா என்று டெண்டர் போட்டிருந்தால் கூட யாரும் கவனித்திருக்க மாட்டார்கள், ‘ஒரு பைசா’ என்று போட்டதால்தான் இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன,” என்று எழுத்தாளர் கிருஷ்ணவேணி குறிப்பிட்டுள்ளார்.
