“100 நாட்களைக் கடந்து ஓடும் தோல்விப் படம்!” – சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறித்து வழக்கறிஞர் பாலு அதிரடி விமர்சனம்!
தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள், பேரவைத் தலைவரின் நிலை மற்றும் மாநிலத்தில் இயங்கி வரும் முக்கிய அரசியல் கட்சிகளின் போக்கினை வழக்கறிஞர் பாலு கடுமையாக விமர்சித்துள்ளாா்.

சட்டமன்றத்தில் சபாநாயகரையே திணற வைக்கும் உறுப்பினர்கள்!
சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் பேரவைத் தலைவரின் நிலை குறித்துப் பேசிய வழக்கறிஞர் பாலு, “தற்போதைய சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனே பல நேரங்களில் அவையை நடத்த முடியாமல் திணறும் சூழல் உருவாகியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பு உறுப்பினர்களும் பேரவைத் தலைவருக்கு உரிய முறையில் கட்டுப்படாமல் கூச்சலிட்டு வருகின்றனர்,” என்று வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் வேறு வழியின்றி பல முக்கியமான விஷயங்களை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதேவேளையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் பேசும்போது அவையில் சலசலப்பும் கூச்சலும் அதிகமாகிறது. சபாநாயகர் பேரவையைச் சீரான முறையில் கொண்டு செல்ல எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், உறுப்பினர்கள் அவருக்குரிய மரியாதையைக் கொடுத்துச் சபையின் மாண்பைக் காக்கத் தவறுகின்றனர்,” என வலியுறுத்தினார்.

“ஒன்றிய அரசோடு ஒத்துழைத்து என்ன திட்டம் வந்தது?” – ஆளுங்கட்சிக்குக் கேள்வி!
மத்திய அரசு மற்றும் பாஜகவுடனான மாநில அரசின் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பிய அவர், “அமித்ஷாவோ, மோடியோ தமிழகத்திற்கு வந்தாலும் நாங்கள் முறைத்துக் கொள்ள மாட்டோம்; ஒன்றிய அரசோடு இணக்கமாக ஒத்துழைப்பதன் மூலமாக தமிழகத்திற்கு நன்மைகளையும் பல நல்ல திட்டங்களையும் கொண்டு வரப்போகிறோம் என்று ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இதுவரை ஒன்றிய அரசுடன் ஒத்துழைத்து என்ன ஒரு புதிய திட்டத்தையாவது தமிழகத்திற்கு நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மற்றும் கூட்டணி நிர்வாகிகளின் செயல்பாடு
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டு பாணியைச் சுட்டிக்காட்டிப் பேசிய வழக்கறிஞர் பாலு, “அடுத்தவர்களைப் பேச விடாமல் தடுப்பது மற்றும் தேவையின்றி மற்றவர்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதன்மையான வேலை பாணியாகும். அதைத்தான் நிர்மல் குமார் போன்றவர்கள் தற்போதைய அரசியல் களத்திலும் பேரவையிலும் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்,” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் கூட்டணி நிர்வாகிகளின் பேச்சு குறித்து விமர்சித்த அவர், “அதேபோல, ராஜ்மோகன் பேசுவது ஏதோ பட்டிமன்றம் நடத்துவதைப் போலவும், குடும்பத்தைச் சீரழிக்கப் போவதாகச் சபதம் போடும் தொலைக்காட்சி மெகா தொடர் கதாபாத்திரத்தைப் போலவும் அமைந்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை தினமும் ‘சண்டைக்கு வாங்க, சண்டைக்கு வாங்க’ என்று வம்புக்கிழுத்து அழைப்பது போல் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். இத்தகைய போக்கு தொடருமானால் ‘ஆதவ் அர்ஜுனா’ என்பது ‘ஆணவ அர்ஜுனா’வாக மாறிவிடும் நிலைதான் ஏற்படும்,” என்று கடுமையாகச் சாடியுள்ளாா்.
