ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்கள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோரை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நேபாள நாட்டில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை உடனடியாகக் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசுகள் தரப்பில் விளக்கம்
வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விவரங்களைச் சமர்ப்பித்தனர். அதன்படி:
தமிழகத்தில் இருந்து கைலாச யாத்திரைக்காகச் சென்ற மொத்த 305 பேரில், இதுவரை 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோரின் குடும்பத்தினர், அரசு செலவிலேயே நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அடுத்த வாரத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
