புதுக்கோட்டை அருகே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, பழங்குடியின பள்ளி மாணவிகளை இறக்கிவிட முயன்று ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குச் சென்றபோது நேர்ந்த கொடூரம்
புதுக்கோட்டை மாவட்டம், ரெங்கம்மாள் சத்திரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், இன்று (02-09-2026) காலை புதுக்கோட்டையில் உள்ள தங்கள் பள்ளிகளுக்குச் செல்வதற்காக அரசு நகரப் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தப் பழங்குடியின மாணவிகளை மட்டும் பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு நடத்துநர் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பள்ளிக்கு நேரமாகிவிடும் என்பதால் மாணவிகள் இறங்க மறுத்துள்ளனர்.

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவிகள்
மாணவிகள் இறங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நடத்துநர், பேருந்து சென்றுகொண்டிருந்தபோதே திடீரென கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய மாணவிகள் அடுத்தடுத்து ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர். நடத்துநரே தங்களை வலுக்கட்டாயமாகப் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், கதவைத் திறந்ததால் மாணவிகள் தவறி விழுந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் படுகாயமடைந்து அலறிய மாணவிகளை மீட்ட பயணிகள், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகளும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
பழங்குடியின மாணவிகளிடம் அலட்சியமாக நடந்துகொண்டு, அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆத்திரமடைந்த கிராம மக்கள் புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
