ராகுல் காந்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
மராட்டிய மாநிலத்தில் அரசுப் பணி தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக அரசுப் பணிக்குத் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தேர்வர்கள் புனேவில் நேற்று (07-09-2026) வீதியில் இறங்கி பிரம்மாண்ட போராட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
மார்ச் மாதத் தேர்வில் முறைகேடு – 7 பேர் கைது
கடந்த மார்ச் மாதம் மராட்டிய மாநிலத்தில் மருந்து ஆய்வாளர் பணிக்கான ‘குரூப்-பி’ தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவடைந்த நிலையில், அதன் வினாத்தாள் கசிந்தது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட மும்பை காவல்துறையினர், இத்தேர்வில் மாநில அளவில் 7-வது இடம் பிடித்த பெண் தேர்வர் உட்பட 7 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் மராட்டியம் முழுவதும் தேர்வர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகைப் பேரணி
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், அரசுத் தேர்வு செயல்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புனேவில் திடீரென ஒன்று கூடினர். புனேவில் உள்ள புகழ்பெற்ற ஓம்காரேஷ்வர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றது.
பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்
எம்.பி.எஸ்.சி (MPSC) தலைவரும், ஆணையத்தின் செயலாளரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திப் பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசுத் தேர்வுகளை மிகவும் நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும், தேர்வு ஆணையத்தில் தகுதியும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
களத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகள்
இளைஞர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணியைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் வருகை தந்து தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். என்சிபி (சரத்சந்திர பவார்) கட்சியின் செயல் தலைவரும் எம்பியுமான சுப்ரியா சூலே மற்றும் எம்.எல்.ஏ ரோஹித் பவார் ஆகியோர் புனேவில் நடைபெற்ற பேரணியில் இளைஞர்களுடன் இணைந்து நடந்து சென்று ஆதரவு குரல் கொடுத்தனர்.
அதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களும் இப்போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, இதே போன்ற அரசுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியிலும் கரப்பான் பூச்சிகள் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
