தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கொண்ட ‘பர்தா கும்பலை’ தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் இரண்டே நாளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 சவரன் நகை திருட்டு
செங்கல்பட்டுக்குச் செல்வதற்காக கடந்த சனிக்கிழமை மதியம் தாம்பரம் பேருந்து நிலையம் வந்த ஞானமணி (56) என்ற பெண், பேருந்தில் ஏறி அமர்ந்தபோது கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச் சங்கிலி மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
கழிப்பறையில் பர்தா மாற்றம் – CCTV-யில் சிக்கிய தந்திரம்
பேருந்து நிலையத்திலிருந்த CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பர்தா அணிந்த 3 பெண்கள் பேருந்தில் ஏறுவது போல் நடித்து நகையைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.
போலீசார் பேருந்து நிலையத்தில் ரகசியமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அதே 3 பெண்கள் மீண்டும் அங்கு நடமாடுவதைக் கண்டறிந்தனர். அவர்கள் பேருந்து நிலைய கழிப்பறைக்குச் சென்று பர்தா உடைக்கு மாறி, கூட்ட நெரிசலில் மீண்டும் கைவரிசை காட்டத் தயாரானபோது போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
30-க்கும் மேற்பட்ட வழக்குகள்
விசாரணையில், கைதானவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமன் (35), கங்காபாய் (57) மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோனியா (30) என்பது தெரியவந்தது.
இவர்கள் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பர்தா அணிந்து நூதன முறையில் திருடி வந்ததும், இவர்கள் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அம்பலமானது. கர்நாடகாவின் வாடி காவல் நிலைய திருட்டு வழக்கில் ஜாமினில் வெளிவந்த இவர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருக்க சென்னை எழும்பூர் லாட்ஜில் தங்கி, மின்சார ரயில் மூலம் தாம்பரம் வந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
நகை பறிமுதல் & சிறை அடைப்பு
தமிழகத்தில் முதன்முறையாகத் திருட்டில் ஈடுபட்ட இவர்கள் இரண்டே நாளில் தாம்பரம் போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர். அவர்களிடம் இருந்த 4 சவரன் சங்கிலியைப் பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
பேருந்துகளில் ஏறும் போது பயணிகள் தங்கள் உடைமைகள் மற்றும் நகைகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என தாம்பரம் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
