ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்கள் மேற்கு நோக்கி விரிவடையும் அபாயம் இருப்பதாக மால்டோவா அதிபர் மையா சாண்டு எச்சரித்துள்ளார்.


உக்ரைன்–மால்டோவா எல்லைப் பகுதியில் உள்ள முக்கியமான எல்லைக் கடப்புப் பகுதியில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
எல்லைப் பகுதியில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் Odesa பிராந்தியத்தில் உள்ள Starokozache எல்லைக் கடப்புப் பகுதி மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்குப் பிறகு பயணிகள் மற்றும் வாகனங்களுக்கான எல்லைப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
“ரஷ்யாவின் Frontline மேற்கு நோக்கி நகர்கிறது”
இந்த தாக்குதலைத் தொடர்ந்து மால்டோவா அதிபர் மையா சாண்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் போரின் தாக்கம் தங்கள் நாட்டின் எல்லைக்கு மேலும் நெருங்கி வருவதாகக் கூறிய அவர், “ரஷ்யாவின் frontline மேலும் மேற்கு நோக்கி நகர்கிறது” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், மால்டோவா தனது வான் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு திறன்களை ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்து வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மால்டோவா வான்வெளியிலும் பதற்றம்
இதற்கு ஒருநாள் முன்னதாகவே ரஷ்ய ட்ரோன் ஒன்று மால்டோவாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போது உக்ரைன்–மால்டோவா எல்லைக்கு அருகிலேயே தாக்குதல் நடைபெற்றிருப்பதால், ரஷ்யா–உக்ரைன் போரின் தாக்கம் மால்டோவாவுக்கும் நேரடியாக ஏற்படத் தொடங்கியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் மீது மீண்டும் தீவிர தாக்குதல்
அதே நேரத்தில், ரஷ்யா கீவ் உள்ளிட்ட உக்ரைன் பகுதிகளிலும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
சமீபத்திய தாக்குதல்களில் கீவ் நகரில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் கூடுதல் வான் பாதுகாப்பு உதவியை கோரி வருகிறது.
மால்டோவாவுக்கு ஏன் அச்சம்?
மால்டோவாவின் கிழக்குப் பகுதியில் உள்ள Transnistria பிராந்தியத்தில் ரஷ்ய ராணுவ இருப்பு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால் உக்ரைன் போர் மேலும் விரிவடைந்தால், மால்டோவாவின் பாதுகாப்பு நிலைமை சிக்கலாகலாம் என்ற அச்சம் ஏற்கனவே நிலவி வருகிறது.
ஆனால், ரஷ்யா தற்போது மால்டோவாவை நோக்கி நேரடியாக படைகளை நகர்த்துகிறது என்பதற்கான உறுதியான ஆதாரம் வெளியாகவில்லை. தற்போதைய எச்சரிக்கை, உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் மால்டோவா எல்லையை நெருங்கி வருவதையும், அந்நாட்டின் வான்வெளி மீறல்களையும் அடிப்படையாகக் கொண்டது.
போர் மேலும் விரிவடையுமா?
ஒருபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கான ராணுவ உதவியை அதிகரித்து வருகின்றன. மறுபுறம் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்த சூழலில், உக்ரைன் போரின் தாக்கம் மால்டோவா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மேலும் பரவுமா? என்பது சர்வதேச அரசியலில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
