கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாங்கிய ரூ.38 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாக பாஜக மாநில நிர்வாகி அஸ்வத்தாமன் மீது முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
ரூ.38 லட்சம் பணப் பிரச்சினை
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் பாலசுப்பிரமணியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக மாநில நிர்வாகி அஸ்வத்தாமன் தன்னிடம் ரூ.38 லட்சம் பணத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொலை மிரட்டல் குற்றச்சாட்டு
தேர்தல் முடிந்த பின்னரும் நீண்ட நாட்களாகப் பணத்தைத் திருப்பித் தராமல் அஸ்வத்தாமன் இழுத்தடித்து வந்ததாகவும், இதுகுறித்து நேரில் சென்று நியாயம் கேட்டபோது, பணத்தைத் தராமல் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாலசுப்பிரமணியன் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்துத் தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரியுள்ளார்.
உட்கட்சி பூசலால் பரபரப்பு
புகார் அளித்த பாலசுப்பிரமணியன், ஏற்கனவே பாஜகவின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கட்சியில் பயணித்த முன்னாள் மாவட்டத் தலைவரே, மாநில நிர்வாகி மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், பாஜக நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
