தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பிரதமர் நரேந்திர மோடி அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


உலகின் முக்கிய பொருளாதார சக்திகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. மாநாடு இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் முக்கிய அம்சமாக, 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் வெளியிடப்பட்டது. இந்தப் பிரகடனத்தை அனைத்து தலைவர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இந்தியா வந்த WHO தலைவர்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக WHO தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செப்டம்பர் 12-ம் தேதி இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.
இதுதொடர்பாக டெட்ரோஸ் அதானோம் தனது சமூக வலைதளப் பதிவில், டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சுகாதார விவகாரங்களுக்கு முக்கியத்துவம்
பிரிக்ஸ் தலைவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் வலுவான ஆதரவு மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் பிரதிபலிப்பதாக டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குதல், பேரிடர்கள் மற்றும் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ளும் வகையில் வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும், பெருந்தொற்று ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தல், காசநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், டிஜிட்டல் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டின் பிரகடனத்தில் உலக சுகாதாரம் தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை வரவேற்பதாகவும் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தான் சேர்வதற்கு தடையா? இந்தியாவின் எதிர்ப்பால் நீடிக்கும் சிக்கல்!
