Homeசெய்திகள்மாவட்டம்ஆம்னி பேருந்தில் 41 சவரன் நகை கொள்ளை: மத்திய பிரதேச கொள்ளையன் கைது – 128...

ஆம்னி பேருந்தில் 41 சவரன் நகை கொள்ளை: மத்திய பிரதேச கொள்ளையன் கைது – 128 சவரன் சுருட்டிய வெளிமாநிலக் கும்பலின் பகீர் பின்னணி!

-

- Advertisement -

திருநெல்வேலி அருகே ஆம்னி பேருந்தில் பயணித்த கல்லூரி உதவி பேராசிரியையிடம் 41 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளையனைத் தனிப்படை போலீசார் அம்மாநிலத்திற்கே சென்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடமிருந்து முழு நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை ஹோட்டல்களில் ஆம்னி பேருந்துகளைக் குறிவைத்து கைவரிசை காட்டும் வெளிமாநிலக் கும்பலின் பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆம்னி பேருந்தில் 41 சவரன் நகை கொள்ளை: மத்திய பிரதேச கொள்ளையன் கைது – 128 சவரன் சுருட்டிய வெளிமாநிலக் கும்பலின் பகீர் பின்னணி!

we-r-hiring

மகனின் திருமணத்திற்குச் சென்றபோது நடந்த துயரம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிலிப்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜூலியட் லதா (59). தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வரும் இவர், தனது கணவர் ஜஸ்டின் சகாயராஜுடன் சேர்ந்து, ஆகஸ்ட் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காகக் கிளம்பினார். கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு 41 சவரன் தங்க நகைகளுடன் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் இருவரும் பயணித்தனர்.

5 நிமிட இடைவெளியில் ஹேண்ட் பேக்கில் கைவரிசை
திருநெல்வேலி – கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், கயத்தாறு டோல்கேட் அடுத்துள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு 8 மணியளவில் ஆம்னி பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது ஜூலியட் லதாவும் அவரது கணவரும் பேருந்தில் இருந்து இறங்கி ஓய்வறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பினர். பேருந்திற்குள் வந்து பார்த்தபோது, ஹேண்ட் பேக் திறந்து கிடப்பதைக் கண்டு ஜூலியட் லதா அதிர்ச்சியடைந்தார். உள்ளே வைத்திருந்த 41 சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டது.

டிஜிட்டல் ஆதாரங்களும் தனிப்படை அமைப்பும்
தகவல் அறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹோட்டல் மற்றும் ஆம்னி பேருந்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி எஸ்.பி. சிவப்பிரசாத் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன், ஏ.எஸ்.பி. நீல் சர்மா ஐ.பி.எஸ், இன்ஸ்பெக்டர்கள் வானமாமலை, ராமச்சந்திரன் மற்றும் காவலர்கள் செல்லத்துரை, கார்த்திக் ராஜா, ராமகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாட்ஸ்அப் க்ரூப் மூலம் கிடைத்த தடயம்: மத்திய பிரதேசத்தில் கைது
சிசிடிவி காட்சியில் பதிவான சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படத்தை க்ரைம் வாட்ஸ்அப் குரூப்களில் பதிவிட்டபோது, அதே நபர் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆம்னி பேருந்துகளில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. டிஜிட்டல் தொழில்நுட்ப ரீதியாகத் துப்புதுலக்கியதில் இது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் என்பது உறுதியானது. இதையடுத்து, தூத்துக்குடி எஸ்.பி. சிவப்பிரசாத் மத்திய பிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திற்கு விரைந்த கோவில்பட்டி தனிப்படை போலீசார், அங்கே முகாமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மக்ஸூத் கான் (35) என்பவனைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவனிடமிருந்து களவுபோன 41 சவரன் தங்க நகைகளும் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள கூட்டாளிகளான கார்டு மைதீன் கான், ராபிக் ஆகிய இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொள்ளைக் கும்பலின் ‘மாஸ்டர் பிளான்’ – காவலர்தரப்பு அதிர்ச்சித் தகவல்
வழக்கின் விசாரணைப் போக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,  “மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தக் கொள்ளைக் கும்பல் தமிழகத்தில் ஊடுருவி, நெடுஞ்சாலைகளில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களைப் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு வேவு பார்த்து வந்தது. பேருந்து ஓட்டுநரும் கிளீனரும் இறங்கிச் சென்றதும், கும்பலில் ஒருவன் மட்டும் சத்தமில்லாமல் பேருந்திற்குள் ஏறி பெண்களின் ஹேண்ட் பேக்குகளை மட்டும் குறிவைத்து நகைகளைத் திருடுவான். வெறும் 5 நிமிடங்களில் நகையைத் திருடி வெளியே நிற்கும் கூட்டாளியிடம் கைமாற்றிவிட்டு தப்பிவிடுவார்கள்.

தமிழ்நாட்டுப் பெண்கள் பயணத்தின்போதும் தூங்கும்போதும் தங்க நகைகளைக் கழற்றி ஹேண்ட் பேக்கில் வைக்கும் வழக்கத்தை நுட்பமாக அறிந்து இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, கோவில்பட்டி, கயத்தாறு ஆகிய இடங்களில் மொத்தம் 128 சவரன் நகைகள் மற்றும் லட்சக்கணக்கான பணத்தை இந்தக் கும்பல் சுருட்டியுள்ளது” என்றார். மேலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையால் அவதிப்பட்டு வந்த பயணிகளுக்கு, தற்போது அரங்கேறி வரும் வெளிமாநிலக் கொள்ளைக் கும்பலின் ஊடுருவல் மற்றும் அடுத்தடுத்த கைவரிசைகள் மேலும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!

MUST READ