தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே தொகுதிகளில் மீண்டும் போட்டியிடும் அரசியல் போக்கு வாக்காளர்களை அவமானப்படுத்துவதாகவும், அது கேலிக்கூத்தானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.![]()
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆறு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான த.வெ.க.-வில் இணைந்தனர்.

இவர்களில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இடைத்தேர்தலுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கிடையே, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இல்லாத காரணத்தினால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.
பொதுநல மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள்
மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடும் நபர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
மனுவின் முக்கிய அம்சங்கள்
சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதால், பொதுமக்களின் வரிப்பணத்தில்தான் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது; எனவே, அந்தத் தேர்தல் செலவுகளை அந்த நபர்களிடமே வசூலிக்கும் வகையில் உரிய நடைமுறையை வகுக்க வேண்டும். குறுகிய காலத்தில் பதவி விலகி மீண்டும் போட்டியிடுபவர்களைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தேர்தலில் போட்டியிடத் தடை செய்யும் சட்டம் குறித்துத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவும், அங்கு த.வெ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்கவும் தடை விதிக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அதிருப்தியும் உத்தரவும்
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்த முக்கியக் கருத்துகள், “மக்கள் பெரும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், இதுபோன்று குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நடவடிக்கைகள் கேலிக்கூத்தானவை; இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இதுவரை இல்லை என்றாலும், தேர்தல் ஆணையம் இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்து உரிய வழிமுறைகளைக் கொண்டுவர வேண்டும். சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் ஆணையம் இதற்கென முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.” இருப்பினும், இந்த வழக்கில் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், இதுதொடர்பான ஒத்த வழக்குகள் ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து விசாரிக்கப் பரிசீலிக்குமாறு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
