ரூ.2,000-க்கு மேற்பட்ட சில யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்தக் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.


அக்டோபர் 15 முதல் புதிய கட்டணம்
புதிய விதிகளின்படி, அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-க்கு மேல் உள்ள சில Person-to-Merchant (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத Merchant Discount Rate (MDR) விதிக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு MDR இல்லை. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவது போன்ற Person-to-Person (P2P) பரிவர்த்தனைகளும் இந்தக் கட்டண முறையின் கீழ் வராது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு
இந்தக் கட்டண முறையால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. கட்டணம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வணிகர்கள் மீது கூடுதல் செலவு ஏற்பட்டால் அது பொருட்களின் விலையில் பிரதிபலித்து விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் கட்சி கூறியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகம் என விமர்சனம்
யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிப்பது வங்கிகள், பணப்பரிவர்த்தனை செயலி நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது
இதனிடையே, புதிய MDR கட்டணத்தை வணிகர்கள் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணமாக மாற்றக் கூடாது என்று மத்திய அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளில் கட்டணம் விதிக்கப்படும் என்றாலும், அந்தச் செலவை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டண முறைக்கு அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளதால் இந்த விவகாரம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
