அரபிக்கடலில் சர்வதேச கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மீது பாகிஸ்தானின் ஆஃப்ஷோர் பேட்ரோல் கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓமனுக்கு கிழக்கே 220 கி.மீ தொலைவில் சம்பவம்
ஓமனுக்கு கிழக்கே சுமார் 220 கி.மீ தொலைவில் உள்ள வட அரபிக்கடல் சர்வதேச கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது பாகிஸ்தானின் ஆஃப்ஷோர் பேட்ரோல் கப்பலான PNS Hunain, இந்திய போர்க்கப்பலை நோக்கி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
எச்சரிக்கையை மீறி மோதல்
இந்திய தரப்பில் இருந்து கடல்சார் அவசரத் தொடர்பு அலைவரிசையான Channel 16 மூலம் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் கப்பல் வேகத்தை அதிகரித்து, இந்தியக் கப்பலின் வலதுபுறமாக குறுக்கே வந்து மோதியதாக கூறப்படுகிறது.
இதில் PNS Hunain கப்பலின் முன்பகுதி இந்திய போர்க்கப்பலின் மீது உரசியதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தியக் கப்பலுக்கு கட்டமைப்பு சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இந்தியக் கப்பல் தொடர்ந்து தனது பணியை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு கண்டனம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் தூதரகப் பொறுப்பாளர் சாத் அகமது வாரிச்சை நேரில் அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டு ஒப்பந்தம் மீறப்பட்டதாக இந்தியா சுட்டிக்காட்டு
ராணுவப் பயிற்சிகள் மற்றும் இரு நாடுகளின் ராணுவ நடமாட்டங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏப்ரல் 1991-ல் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் Article 10 விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக இந்திய தரப்பு சுட்டிக்காட்டியதாக செய்தி தெரிவிக்கிறது.
