Homeசெய்திகள்தமிழ்நாடுபெருநிறுவனங்கள் லாபம் குவிக்க சாமானியர்களை வதைப்பதா?: யு.பி.ஐ கட்டண உயர்வுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

பெருநிறுவனங்கள் லாபம் குவிக்க சாமானியர்களை வதைப்பதா?: யு.பி.ஐ கட்டண உயர்வுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

-

- Advertisement -

அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் மற்றும் நிலையான கட்டணம் அமல். அமெரிக்க நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தரும் மத்திய அரசின் ஏழை விரோதப் போக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தல்.பெருநிறுவனங்கள் லாபம் குவிக்க சாமானியர்களை வதைப்பதா?: யு.பி.ஐ கட்டண உயர்வுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

செல்லா நோட்டு அறிவிப்பு மூலம் மக்களைப் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளிய மோடி அரசு, தற்போது யு.பி.ஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதித்து சாமானிய மக்களின் மீது கூடுதல் சுமை சுமத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

we-r-hiring

கட்டண உயர்வின் பின்னணி
மோடி அரசாங்கம் மேற்கொண்ட சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, வரும் அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.300 வரை MDR கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

மேலும், ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் வேளாண் உள்ளீடுகள் போன்ற துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 நிலையான கட்டணம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையானது வங்கிகளுக்கும், யு.பி.ஐ செயலி நிறுவனங்களுக்கும் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமானியர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பாதிப்பு
ஏற்கனவே பல்வேறு வரிச் சுமைகளாலும், விலைவாசி உயர்வினாலும்தத்தளிக்கும் எளிய மக்கள் மீது சொந்தப் பணத்தைக் கையாளக் கட்டணம் செலுத்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

வணிகர்களுக்கான கட்டணம் என்று கூறப்பட்டாலும், இந்தச் சுமை சரக்கு மற்றும் சேவைகளின் விலையில் ஏற்றப்பட்டு இறுதி விலையேற்றத்திற்கே வழிவகுக்கும்.

குறிப்பாக, ரூ.1 லட்சம் வரை மாதாந்திர யு.பி.ஐ வரவுள்ள சிறு வணிகர்கள், சில ஆயிரங்கள் மட்டும் சம்பாதிக்கும் சிறிய வியாபாரிகள் கூட இந்தக் கட்டண வலைக்குள் இழுக்கப்படுவதால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமான முடிவு
யு.பி.ஐ பரிவர்த்தனைகளில் 53 சதவீத சந்தைப் பங்கை வைத்துள்ள ‘போன் பே’ (PhonePe) மற்றும் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ‘ஜி பே’ (GPay) ஆகிய இரண்டு முக்கிய நிறுவனங்களும் அமெரிக்காவைச் சார்ந்தவை ஆகும். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி சபையின் நிர்ப்பந்தத்திற்கு மோடி அரசு பணிந்து கொண்டுவந்துள்ள இந்த விதிமுறை, இந்திய எளிய மக்களின் கைகளில் இருந்து பணத்தைப் பறித்து பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யும் செயலாகும் என சிபிஐ(எம்) குற்றம்சாட்டியுள்ளது.

உடனடித் திரும்பப் பெற கோரிக்கை
எனவே, லாப நோக்கில் ஏகபோக பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக யு.பி.ஐ கட்டமைப்பை மாற்றக் கூடாது என்றும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் எப்போதும்போல் இலவசமாகத் தொடர்வதை உறுதி செய்யும் வகையில், யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் விதிக்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட டெண்டர் இல்லை; முதல்வர் அறை புதுப்பிப்புக்கு ரூ.6 கோடியா? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

MUST READ