இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அவரது நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘வேட்டுவம்’. ஆர்யா, வி ஆர் தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் அதிரடியான அறிமுக வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று காலக் கதைக்களம் மற்றும் அதிகார அரசியல்
‘அழிவு என்பது முடிவு அல்ல, புதியதின் தொடக்கம்’ என்ற புத்தரின் வாசகத்துடன் தொடங்கும் இந்த முன்னோட்ட வீடியோவிற்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது பின்னணிக் குரல் மூலம் கதைக்களத்தை விளக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் பேசுகையில்,

“ஆதிகால மக்களின் வாழ்க்கை முறைச் தாக்கம் சமகாலத்தை எப்படி பாதித்துள்ளது, அதன் விளைவாக இயற்கை உருவாக்கிய பேரழிவு எதிர்காலத்தில் என்ன மாற்றத்தை உருவாக்கப் போகிறது என மூன்று காலங்களைப்பற்றி பேசுகிறது. அந்த மூன்று காலகட்டங்களிலும் மனிதர்களின் போட்டி மனோபாவம் மற்றும் நிலத்தை ஆள்வதற்கான ‘பவர் பாலிடிக்ஸ்’ குறித்து ஆழமாகப் பேசியுள்ளோம். விலங்கைக் கொல்வது வேட்டை என்றால், பல இனக்குழுக்கள் தங்களுக்குள் யார் அதிகாரம் மிக்கவர்கள் என்று காட்டுவதற்காக நடக்கும் சண்டைதான் ‘வேட்டுவம்’. இதில் அடிமுறை, மால்கம்பு போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

கதாப்பாடரங்களின் அறிமுகமும் மிரட்டலான சண்டைக் காட்சிகளும்
இப்படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர்களின் கதாபாத்திரப் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆர்யா ‘தர்மராஜன்’ என்ற கதாபாத்திரத்திலும், ஷபீர் ‘செம்பியன்’ என்ற கதாபாத்திரத்திலும், கலையரசன் ‘வீரவர்மன்’ என்ற கதாபாத்திரத்திலும், சோபிதா துலிபாலா ‘ரதி’ என்ற கதாபாத்திரத்திலும், தினேஷ் ‘நந்தன்’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இவர்களின் உக்கிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிக் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
பான் இந்தியா வெளியீடு
படத்தின் தலைப்புக்கேற்ப அதிகாரத்தைக் கைப்பற்ற மோதிக் கொள்ளும் தலைமைகளின் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், பிற மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தமிழில் பா.ரஞ்சித் குரல் கொடுத்தது போல், தெலுங்கில் ராணா டகுபதி, கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் சௌபின் சாகிர் மற்றும் இந்தியில் பங்கஜ் திரிபாதி ஆகியோர் இப்படத்தின் முன்னோட்டத்திற்கு குரல் கொடுத்து சிறப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சோகங்களைத் தாண்டி, தற்போது வெளியாகி உள்ள இந்த அறிமுக வீடியோ சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தில் இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
