சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண், திருமணமாகி ஐந்தே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய ஈகோ பிரச்சனை காரணமாக இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஈ.பி. காலனி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் ஜோஸ்வான் (28) மற்றும் அன்பரசி (27) தம்பதியினர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. அன்பரசி கிழக்கு கடற்கரைச் சாலைப் (ECR) பகுதியில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்திலும், ஜோஸ்வான் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பணிபுரிந்த இவர்களுக்குள் ஆரம்பத்தில் சுமூகமான வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

ஈகோ பிரச்சனையும் தற்கொலை முடிவும்
இந்நிலையில், சொந்த ஊருக்குச் செல்வது தொடர்பாகக் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஈகோ பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவரும் சரிவரப் பேசாமல் மனக்கசப்புடன் இருந்து வந்துள்ளனர். 
நடந்தது என்ன?
சம்பவத்தன்று வழக்கம்போல் ஜோஸ்வான் தனது நண்பரைப் பார்ப்பதற்காக வெளியில் சென்றுவிட்டு சுமார் 3 மணி நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கையறையில் அன்பரசி தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பைக் கண்டு ஜோஸ்வான் அதிர்ச்சியடைந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அன்பரசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
RDO விசாரணைக்கு உத்தரவு
இது குறித்துத் தகவலறிந்த பீர்க்கன்கரணை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அன்பரசியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ. (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கணவர் ஜோஸ்வானிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்துத் கைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டிய இளம் தம்பதிக்குள் ஏற்பட்ட சின்னத் தகராறு மரணத்தில் முடிந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்! 2,000-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு
