செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்ற நிலையில், வரும் செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் அனுமதி அளித்துள்ளது.
நாளை வங்கிகள் செயல்படும்
செப்டம்பர் 26-ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்றால், அதன் பின்னர் செப்டம்பர் 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம் காரணமாக தொடர்ந்து பல நாட்கள் வங்கி கிளை சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் அத்தியாவசிய வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வங்கிகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கி கிளைகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் மற்றும் கரன்சி செஸ்ட்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் பணம் எடுப்பதற்கு கட்டணம் இல்லை
வங்கி வேலைநிறுத்த காலத்தில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு வசதியாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) குறிப்பிட்ட வேலைநிறுத்த காலத்தில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால் வேலைநிறுத்த நாட்களில் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பரிவர்த்தனை கட்டணம் தொடர்பான சுமை இருக்காது.
டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்தலாம்
வங்கி கிளை சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டாலும், ஏடிஎம், யுபிஐ, மொபைல் பேங்கிங் மற்றும் இணைய வங்கி உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
எனவே, வேலைநிறுத்தத்துக்கு முன்பாக பணம் எடுப்பது, காசோலை உள்ளிட்ட முக்கிய வங்கி பணிகளை முடிப்பது போன்றவற்றை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தின் காரணமாக வங்கி சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளை குறைக்கும் வகையில், செப்டம்பர் 27-ம் தேதி வங்கிகளை செயல்பட வைக்கும் நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருப்பு!
