போக்குவரத்து விதிகளை மீறுபர்களுக்கு ‘இ-சலான் மூலம் அபராதம் விதிப்பது மட்டும் போதாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தொகையை வசூலிப்பதை மேம்படுத்த, செலுத்தப்படாத அபராதங்களை மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது


போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் அமல்படுத்துவது மற்றும் செலுத்தப்படாத போக்குவரத்து இ-சலான் அபராதங்களை வசூலிப்பது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நாடு முழுவதும் சுமார் ரூ. 45,000 கோடி மதிப்பிலான அபராதத் தொகை நிலுவையில் இருப்பதாகவும், அதில் இதுவரை சுமார் ரூ. 25,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இ-சலான் வழங்குவது மட்டும் போதாது
அப்போது நீதிபதிகள், போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக காவல்துறையினர் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ‘இ-சலான்’களை வழங்கக்கூடும் என்றாலும், அவற்றின் மூலம் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பதே உண்மையான சவால் ஆகும், எனவே போக்குவரத்து அபராதத் தொகையை வசூலிக்க அதிகாரிகள் கள அளவில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், பெயரளவில் இ-சலான் வழங்குவது மட்டும் போதாது என்றும் அந்த அபராதத் தொகையை வசூலிப்பதை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கலாம்
குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை மக்கள் செலுத்தாத பட்சத்தில், அதனை அவர்களின் மின்சாரக் கட்டணத்துடன் சேர்த்துவிட வேண்டும், ஏனெனில் அவர்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும் இல்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே இதற்கான வழிமுறையை வகுத்துச் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினர்.
வாகனப் பதிவைத் தடுக்கலாம்
மேலும், நிலுவையில் உள்ள அபராதங்கள் கொண்ட வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் புதுப்பித்தல் மற்றும் உரிமையாளர் மாற்றத்தையும் தடுக்கலாம் என்றும், வாகனங்களுக்கான அபராதத் தொகைகள் செலுத்தப்படும் வரை, அவற்றின் தகுதிச் சான்றிதழை வழங்கக்கூடாது என்றும், ‘பரிவாஹன்’ இணையதளத்தில் இத்தகைய வாகனங்களைப் ‘கறுப்புப் பட்டியலில்’ சேர்ப்பது குறித்தும், நிலுவையில் உள்ள அபராதங்களுடன் தொடர்புடைய ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிப்பதை நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் அறிவுறுத்தினர்.
வாகனங்களை பறிமுதல் செய்யலாம்
மேலும், வாகனங்களை திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், செலுத்தப்படாத ‘இ-சலான்’ கொண்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்த நீதிபதிகள், கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் தீர்வுகளைக் காண வேண்டும் என்று கூறினர்.
மேலும் பேசிய நீதிபதிகள், செலுத்தப்படாத போக்குவரத்து அபராதத் தொகையை மின்சாரக் கட்டணத்துடன் இணைப்பது என்பது முன்வைக்கப்பட்டுள்ள ஒரு யோசனை மட்டுமே என்றும், அது நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவு அல்ல என்றும் தெளிவுபடுத்தினர்.
அரசின் அப்பட்டமான தோல்வி இது – பாலியல் குற்றங்கள் குறித்து கொந்தளித்த உச்சநீதிமன்றம்
