இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க காங்கிரஸ் மீண்டும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுள்ளதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சு!


டெல்லியில் நடைபெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் குழு கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க காங்கிரஸ் மீண்டும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுள்ளதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் ஆவணங்கள் மற்றும் வாக்காளர் தரவுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கார்கே தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் முக்கிய மாற்றங்களின் தரவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும், நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு தகவல் மற்றும் மேல்முறையீட்டு வாய்ப்பு வழங்க வேண்டும், அரசியல் கட்சிகளுக்கு தேவையான வாக்காளர் தரவுகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும், முறைகேடுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும், தேர்தல் தொடர்பான முக்கிய தரவுகள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என 5 கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.
மேலும், வாக்காளர் உரிமையை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் ஏற்காது என்றும், தேர்தல் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்களே தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளை தன்னிச்சையானது என தெரிவித்துள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார். எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒவ்வொரு தகுதியான வாக்காளரின் வாக்கும் பாதுகாக்கப்பட்டு, தேர்தல் நடைமுறை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஐ.டி. உயர் பதவிக்கு குட் பை! ராபிடோ ஆட்டோ ஓட்டி புதிய பாதை அமைத்த பெங்களூரு பெண்
