சீனாவில் மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து சென்று அவற்றை ஆய்வு செய்யும் அதிநவீன ரோபோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. யுனான் மாகாணத்தின் குன்மிங் பகுதியில் இந்த ரோபோ மூலம் மின் விநியோகக் கம்பிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.


மின் கம்பியை சுற்றிப்பிடித்தபடி பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேமராக்கள் மற்றும் பல்வேறு சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் மின் கம்பிகளில் ஏற்பட்டுள்ள சேதம், தேய்மானம் மற்றும் அதிக வெப்பம் போன்ற பிரச்சினைகளை கண்டறிய முடியும்.
130 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆய்வு
இந்த ரோபோ இதுவரை 130 கிலோமீட்டருக்கும் அதிகமான மின் விநியோகக் கம்பிகளை ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதர்கள் நேரடியாக மேற்கொள்ளும் ஆய்வை விட சுமார் 3 மடங்கு வேகமாக பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
ட்ரோன்களுக்கு மாற்றாக புதிய தீர்வு
பொதுவாக மின் கம்பிகளை ஆய்வு செய்வதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றை பயன்படுத்த முடியாது. இதுபோன்ற சூழல்களில் மின் கம்பியின் மீதே நேரடியாக ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் இந்த ரோபோ முக்கியமானதாக அமைந்துள்ளது.
மேலும், மின் கம்பிகளில் உள்ள தடைகளை கடந்து செல்லும் வகையில் இதன் உடல் நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் சென்று ஆய்வு செய்வது சிரமமான அல்லது அபாயகரமான பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.
மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் மின்சார விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகளை குறைக்கவும், பராமரிப்பு பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவும் இந்த ரோபோ உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
