மகாத்மா காந்தி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்டதாக, குஜராத்தைச் சேர்ந்த 47 வயது சமூக வலைதள பிரபலம் சிம்ரன் படேலை சூரத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


காந்தி உருவம் இடம்பெற்ற ரூ.500 நோட்டு
சிம்ரன் படேல் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் ரூ.500 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஆட்சேபனைக்குரிய முறையில் பயன்படுத்தியதாகவும், அவதூறான கருத்துகள் மற்றும் பாலியல் சைகைகள் இடம்பெற்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
வைரலான வீடியோ – போலீசில் புகார்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சூரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தர்மேஷ் காமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிம்ரன் படேலின் இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் வீடியோ தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி. சட்டத்தின் கீழ் கைது
சிம்ரன் படேல் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மின்னணு வடிவில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுவது அல்லது பரப்புவது தொடர்பான பிரிவாக இது உள்ளது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோவை நீக்கியதாக தகவல்
போலீசில் புகார் அளிக்கப்படும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரீல்ஸ் வீடியோ சிம்ரன் படேலின் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இருப்பினும், போலீசார் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
போலீசார் முக்கிய எச்சரிக்கை
தேசிய தலைவர்கள், மத மற்றும் சமூக அடையாளங்கள் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய, அவதூறான அல்லது ஆபாசமான உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவோ பகிரவோ வேண்டாம் என சூரத் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
லைக்ஸ், ஃபாலோயர்கள் அல்லது சமூக வலைதளப் பிரபலமடைவதற்காக சட்டவிரோதமான உள்ளடக்கங்களை வெளியிடுவது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
2006 வழக்கை தூசிதட்டிய கேரள அரசு: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடி!
